இத்தொகுதியில்   சிங்கப்பூரின் திணைகளைக் கவனப்படுத்திப் புலம்பெயர் வாழ்வியலின் இயல்புகளை மையப்படுத்தும் விதமாகக் கவிதைகள்  எழுதப்பட்டிருக்கின்றன.   இந்த நாட்டுக்குரிய கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் ஆகியவற்றைக் கவிதைகளுக்குள் கொண்டு வரும் முயற்சியாகவும் இருக்கின்றன. இந்நூல்  மந்தாரை மணக்கும் நிலம், ஈஸ்ட்ரோஜனைத் தின்னும் நாகங்கள், முள் கரண்டியில் புரளும் விரல்கள், கடல் கடக்கும் சொற்கள் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.   சமகால வாழ்வியலைச் சித்திரிக்கும் இக்கவிதைகள் இந்நிலத்தின் போதாமையைப் பேசக்கூடியவையாக இருக்கின்றன.  புலம்பெயர் திணையைக் காதலிக்கும் பொன்னி சிரித்துக்கொண்டே துள்ளித் திரிந்து தனக்கான மொழியைப் பற்றிக்கொண்டு இக்கவிதைகளுக்குள் கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள். 

Kadal Nagangal Ponni

This collection of poems focuses on the unique aspects of Singapore and centers on the characteristics of migrant life. It also aims to integrate themes and subjects relevant to the land into the poems. The book is divided into four sections: "Land of Fragrant Mandarai," "Snakes that Devour Estrogen," "Fingers Stirring in a Thorny Spoon," and "Words that Cross the Sea." These poems, depicting contemporary life, address the sense of inadequacy of this land. Ponni, who loves the migrant condition, is seen laughing, dancing, and embracing her own language as she settles into these poems.

பகுதி

பனடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகள்

வெண்ணிறத் தூவிகள் மெல்ல அசைய
நம்பிக்கையின் ஆதூரத்துடன்
தொண்டைக்குழியிலிருந்து வயிற்றுக்குள்
இறங்கிக்கொண்டிருக்கிறது பனடால் வில்லை
வலியே அதன் பிரியமான உணவு
பனடால் எனது வலியை மெல்ல கொறிக்கின்றது
அதன் ருசியைப் பசிய நரம்புகள் உணர்கின்றன
மிரட்டும் கொவிட் பேய்களைக் கண்டு மிரள்வதில்லை
எல்லோருடைய கைகளிலும் பைகளிலும்
பனடால் வாசனை வீசிக்கொண்டிருக்கிறது

வான்தொடும் கட்டடங்கள் நிறைந்த சாலைகளில்
பனடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகளில் ஏறி
விரைந்து கொண்டிருக்கிறது நகரம்