தமிழ்நாட்டிலுள்ளு ஒரு குக்கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒரு மனிதனின் கதையை இந்த நூல் பேசுகிறது. இவனுக்கு முன்னால் மூன்று தலைமுறை எப்படியெல்லாம் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதையும் விவரிக்கிறது. சிங்கப்பூருக்கு வந்த நான்காவது தலைமுறை மனிதன் ஏன் சிங்கப்பூர் வந்தான்? அவனைத் துரத்திய பிரச்சினைகள் என்னென்ன? எந்த ஏற்பாடும் செய்யாமலேயே 4 குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அவன் எவ்வளவு பாடுபடுகிறான்?

Verhalai Thazhuvum Vixhuthuhal

This is a story of a person who was born in a remote village in Tamil Nadu. The story also narrates the lives of three preceding generations. The protagonist is from the fourth generation. After his formal education, he migrates to Singapore because of various problems with his family and community. He came to Singapore without any living arrangements and faced difficulties in bringing up his four children. He eventually overcame all obstacles and became a grassroot leader and an award-winning writer.

பகுதி | Excerpt

அந்த நாளில் ரைஸ்மில், வீடு, ராவுத்தர் குளம், மேய்ச்சல் நிலம், ராபியத்நனிமா, பாப்பாத்தி கூட்டம் இருக்கும் வீடுகள் எல்லாம் அதிகாலையில்  அமைதியாய் இருக்கும். ரைஸ்மில்லில் களம் அவியச்சட்டி, அடுப்பு, தொட்டிகள் எல்லாம் சுத்தமாக கழுவிவிடப்பட்டு இருக்கும். அடுப்பில் ஓர் ஆள் படுத்துத் தூங்கலாம். களத்தில் சிதறிக் கிடக்கும் நெல்லை சிட்டுக் குருவிகளும் மைனாக்களும் அவசரமின்றிப் பொறுக்கும். ரைஸ்மில்லின் சுற்றுச் சுவரில் ஏதோ யோசனையில் காகங்கள் அமர்ந்திருக்கும். வாகைமர உச்சிக் கிளையில் சில கிளிகள் கூப்பிடும். குளத்தில் ஆங்காங்கே மீன்கள் அமைதியாக தலையைக் காண்பித்துவிட்டு மறைந்துவிடும். மேய்ச்சல் நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கும். மாடுகளோடு சுப்பன் வருகிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்து ஏமாந்துபோகும். குளத்துக்கு குளிக்க வருபவர்கள் அதிகாலையே வந்து குளித்துவிட்டு சென்றுவிடுவார்கள். ரைஸ்மில்லில் எந்த வேலையும் இல்லாததால், ரைஸ்மில்லுக்குள் புகுந்து, குளத்துக்குப் போகும் பாதை வழியே வெளியேறி குளித்துவிட்டு மீதிச் சோப்பை கருவக்குச்சியில் சொருகிக் கொண்டு புறப்படுவார்கள். வாத்துகள் அவ்வப்போது ‘குவா குவா’ என்று ஏதோ முக்கியமாக சேதி சொல்வதுபோல் கத்தும். எட்டிப் பார்க்கும் மீன்கள் பயந்து விலகி நீந்தி மறைந்துவிடும்

ராவுத்தரம்மா அதிகாலையிலேயே வடிச்ச கஞத்சியில் நிறைய தவிட்டைப் போட்டு கெட்டியாகப் பிசைந்து பெரிய மண் களையங்களில் வைத்து கோழிகளையும் குஞ்சுகளையும் திறந்துவிடுவார். எல்லாக் கோழிகளும் குஞ்சுகளும் தவிட்டுக் கூழை கொத்திக்கொத்தி விழுங்கிவிட்டு வாசல் வழியே வெளியேறும். வண்டிப்பேட்டையை ஓட்டமும் நடையுமாகக் கடந்து களத்துக்கு சென்றுவிடும். ‘அன்று 27ஆம் கிழமை, ஆட்கள் யாரும் மில்லில் இருக்கமாட்டார்கள்’ என்ற சேதியை வடிச்சகதஞ்சியும் தவிடும் கோழிகளுக்கு சொல்லியிருக்கலாம். ஏதேனும் காகம் தாழப் பறந்தால் தாய்க்கோழி பறந்து விரட்டும். சில சுயநலக் கோழிகள் சிட்டுக்குருவிகள் நெல் பொறுக்குவதைச் சகிக்காமல் அவைகளைத் துரத்தும். குருவிகள் பறந்து விலகிச் சென்று வேறு இடத்தில் பொறுக்கும். எல்லாப் பெட்டைகளையும் பெண்டாள சேவல்கள் துரத்தும். சேவல்கள் சண்டைபோட்டு பிறகு கிடைத்ததை அனுபவித்து அமைதியாகிவிடும்.