இந்த நூல் 5 வயதில் சிங்கப்பூர் வந்தவனின் கதையைச் சொல்கிறது. வாழ்க்கையில் அவன் அனுபவித்த மேடுபள்ளங்கள் அனைத்தையும் வெற்றியுடன் சந்தித்து, ஒரு சிறந்த தொழிலதிபராக, கொடையாளராக, தமிழ்ச் சமுதாயம் போற்றும் தனிப்பெரும் மனிதனாக வளர்ந்த கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டில் இந்து சமயத்திலிருக்கும் ஒரு பிரிவின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களையும் இந்த நூல் பேசுகிறது. இந்த நூலின் நோக்கம். வாழ்க்கையில் பல சுமைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு தன்முனைப்பாக நிச்சயம் பயன்படும் என்பதே ஆகும்.

Ponmanamirundhaal Puvi Vasamaahum

A boy comes to Singapore from India at the age of five. The novel tells the tale of his encounters and challenges in life, and how he eventually achieved success with determination, becoming a prominent professional and community leader who uplifts the Tamil community. The book also explores the lifestyle and cultural practices of a segment of society in Tamil Nadu during the Hindu era.

பகுதி | Excerpt

அம்மையப்பன், விசாலாட்சியுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். எத்தனையோ குடும்பங்களை உருவாக்கிவிட்டு, தனக்கென ஒரு குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். அக்காள், தம்பி, தங்கை அத்துனை பேருடைய  வாழ்க்கையையும் நிர்ணயித்துவிட்டு வந்திருக்கிறார். தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். தந்தையால் ஆளாக்கப்பட்டு, தந்தையால் பெண்பார்க்கப்பட்டு, தந்தை அமைத்துக்கொடுத்த வாழ்க்கை என்றிருந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாய், தானே தந்தையின் கடமையைச் செய்து, தந்தைக்கும் உதவியாய் இருந்து, தனக்கென ஒரு வாழ்க்கையோடு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

ஒரு வகையில் தன் தந்தை முத்தையா செட்டியாருக்கு, நன்றிக்கடன் பட்டிருக்கிறார். பாவம் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. குதிரைப் பந்தயத்தைத் தவிர. ஆனால், அது ஒன்றே போதும் வாழ்க்கை சிரழிய என்பதற்கு நடைமுறை உதாரணமாகிவிட்டதால், இத்தனை ஆண்டுகாலம் சிங்கப்பூரில் இருந்தும், எத்தனையோ வேலைகள் செய்தும், எத்தனையோ விதமான கூட்டாளிகளோடு வாழ்ந்திருந்தும், அம்மையப்பனுக்கு, புகை, மது, சூதாட்டம் என்ற எந்த கெட்ட பழக்கமும் ஏற்படவில்லை. அதற்கு அவர் தந்தை மிகப் பெரிய காரணமாய் இருந்திருக்கிறார். அதற்காகத்தான் அவருக்கு மிக நன்றிக்கடன் பட்டிருக்கிறார். 

நாகராஜன் செட்டியாருக்கு, சுவீகாரப் புத்திரனாக, ராஜன் செட்டியாரின் மருமகனாக, விசாலாட்சியில் கணவராக, பாக்யா, விஜயா, ஹரிதாஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தகப்பனாக, ஏகப்பட்ட பொறுப்புகளுடன் சிங்கப்பூர் வந்திருக்கிறார். பெலிலோஸ் சாலையில் ஏற்கனவே முன்பணம் கொடுக்கப்பட்ட வீட்டுக்கு, நேராக அம்மையப்பன் வந்துவிட்டார். கடையின் புதுப்பிப்புப் பணிகள் முற்றிலும் முடிந்திருந்தன. அந்தக் கடையை அன்று மாலையே விசாலாட்சியோடு சென்று பார்வையிட்டார். பத்தர்கள் இருவரிலும், காத்தமுத்துதான் முக்கியமானவர். பலரும் வந்து விசாரிப்பதாகவும், சீக்கிரமே கடையைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்றும், அதனால் தங்களுக்கும் வேலைகள் கிடைக்குமென்றும் அவர் கூறினார். கடை அந்தப் பத்தர்கள் பெயரில் இருந்தாலும், முழுக்கடைக்கும் வாடகை எல்லாம் முடிவாகி, அந்த நாள்வரை எந்த வாடகை பாக்கியும் இல்லை. அதனால் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.