வெவ்வேறு கதைக்கருக்களை உள்ளடக்கிய 14 சிறுகதைகள் ஆழிப்பெருக்கு நூலில் இடம்பெற்றுள்ளன. பல்லின மக்கள் சேர்ந்து வாழும் சிங்கப்பூரில் உருவாகும் புதிய பந்தம்; நினைவாற்றலை சிறிது சிறிதாக விழுங்கும் முதுமை; குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து வாழ்பவர்களின் பிரிவுத்துயர்; தலைமுறையினருக்கு இடையிலான முரண்; உளவியல் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாகக்கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. சிறுகதைகளிலுள்ள பாத்திரப் படைப்புகளின் வழி, சம காலத்தில் வாழ்பவர்களின் ஆழ்மனக் கொந்தளிப்புகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

Azhiperukku

Azhiperukku consists of 14 short stories covering different social and psychological issues such as the new collective identity established in multiracial Singapore, the losing of our memories due to old age, the pain of being separated from families who are oceans away from us, and intergenerational conflict. The characters in these short stories reflect the inner turmoils of our society.

பகுதி | Excerpt

மருத்துவக் குழுவினர் என் படுக்கையைச் சூழ்ந்தனர். ‘பிளட் பிரஷர்’ கட்டுக்குள் வந்திருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்றும் தலைமை டாக்டர் சொன்னார். அதற்குப் பதிலாகப் புன்னகைக்க முயற்சி செய்தேன். முன்புபோல என்றால் உடனே வீட்டுக்குப் போனடித்திருப்பேன். இரண்டு நாட்களாக உறங்கும் கைபேசியின்மீது பார்வை சென்று மீண்டது. பூனைக்குட்டியைப்போலக் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பேரன் நகுலின் நினைவு அழுத்தத் தொடங்கியது. இலேசாகத் தலையை அசைத்து இளகத் தொடங்கிய மனத்தை இழுத்து நிறுத்தினேன். 

பக்கத்துப் படுக்கை ஆசாமியின்மீது பார்வை சென்று மீண்டது. ‘மறுமுனையில் இருப்பவங்களுக்கு மட்டும் பேசறது கேட்டா போதாதா? வீடியோ காலில் வேற பேசி மனுசன் உயிரை எடுக்கிறாரே!’

இந்த வார்டில் சேர்க்கச் சொன்னபோதே, “அங்க பிரைவசி இருக்காதும்மா” என்று மகன் சொன்னான். பத்திரமாகக் காக்கப்படும் அமைதி, சில சமயங்களில் அச்சத்தை விளைவிக்கவும் செய்யும் என்பதை உணரவியலாத வயது அவனுக்கு. 

“நம்மைச் சுத்தி மனுசங்க இருக்காங்க என்ற நினைப்பே மனசுக்குத் தைரியமா இருக்கும்பா” எனப் பதிலளித்தேன்.

சென்ற முறை ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போனபோது இனி உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு எல்லாவற்றையும் சரியாகக் கடைப்பிடித்து மறுபடி ஆஸ்பத்திரிக்கு போகவே கூடாது என்ற வைராக்கியத்தோடுதான் போனேன். மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தவுடன் காரிடாரின் மூலையின் வெறுமையில் மனம் துணுக்குற்றது. 

“செம்பருத்திச் செடியை இடம் மாத்தி வச்சிட்டீங்களா?” பார்வை அவசரமாகப் தாங்காப்படிக்கு மேலே தாவியது. அங்கும் காணவில்லை. படிக்கட்டுகளுக்கு மேற்புறத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த செடிகளில் புதிதாக ஒரு மஞ்சள் வண்ண ரோஜாச்செடி இடம்பிடித்திருந்தது. என்ன நினைத்தும் என் முக மாற்றத்தை மறைக்க முடியவில்லை.

“அந்தச் செடியில வெள்ளை வெள்ளையா ஒரே பூச்சிம்மா... அப்படியே மத்த செடிங்களுக்கும் பரவிடப் போகுதுன்னு கீழ கொண்டு போய் வச்சிட்டேன்.” 

நாற்பதாவது கல்யாண நாளுக்காக கணவர் எனக்குப் பரிசளித்த செடி அதுவென வீட்டிலுள்ளவர்களுக்கும் தெரியும். தனிமையெனும் இராட்சசனின் பிடிக்குள் சிக்கியிருப்பதை நான் உணர்ந்த நாள் அது. 

“தன்னோட உடம்பைப் பாத்துக்க ஒருத்தரால முடியாதா? ஆம்புலன்ச கூப்பிட்டுப் பதறியடிச்சிக்கிட்டு ஒவ்வொரு முறையும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியிருக்கு...!”

“அதுகூடப் பரவாயில்ல. இவங்கள பார்க்கிறதுக்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் வீட்டிலிருக்கிற புள்ளக்கி ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு வந்துட்டா...?” 

வெறுப்பில் உதிர்ந்த சொற்களைக் கேட்டதிலிருந்து மனம் மேலும் நைந்தது. பக்கத்துப் படுக்கையிலுள்ள பாட்டியிடமிருந்து சிறு குறட்டை சத்தம் வந்தது. வயிறு சரியில்லாத மனிதர் வழக்கம்போலச் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். பதின்ம வயது பெண் கைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘காக்கி என்று உருகுவாளே, நண்பனின் நினைவு இவளுக்கு எப்படி இல்லாமல் போனது? யாருக்குமே அவனைப்பற்றிய அக்கறையே இல்லையா? இவர்களையே சுற்றி வந்தவனாயிற்றே!’

‘அந்நியர்களிடம் ஒரு சிறுவனால் இவ்வளவு இலகுவாகப் பழக முடியுமா? கீழே விழுந்த ஆரஞ்சுப்பழத் தோலை நோயாளி ஒருவர் கண்டுகொள்ளாமல்விட, ஓடிப் போய் எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டானே. அப்போதாவது அவனைப் பார்த்துப் புன்னகைத்திருக்கலாமோ? ஒவ்வொரு முறையும் அவன் அருகில் வரும்போதும் முகம் கொடுக்காமல் இருந்தேனே. அவன் உடம்புக்கு என்ன பிரச்சினைன்னுகூட இதுவரை கேட்கவே இல்லை என்பது நினைவுக்கு வந்தது. நம் நகுலைப்போலவே இங்கு ஒரு சிறுவன் இருக்கிறான் என மகனிடமும் மருமகளிடமும் சொல்ல நினைத்ததையும் இன்னும் சொல்லவில்லையே.’ 

தொடர்ந்து வீசும் காற்றினால் மேலெழும்பும் அலைகளின் முகப்புப்பகுதி சிதறி நுரைதிரளாகக் கரையை நோக்கி வேகமாக ஓடி வருவதைப்போல மனத்தில் டேரலைப்பற்றிய சிந்தனை வெடித்துச் சிதறியதில் நெஞ்சை அடைப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. 

‘அந்தப் பையன் எங்கேன்னு யாராவது கேக்கமாட்டாங்களா?’ பார்வை அங்குமிங்கும் அல்லாடியது. அவரவருக்குச் செய்வதற்கு வேலைகள் இருந்தனபோலும். மணி ஒன்பதாகிவிட்டது. இனியும் பொறுக்க முடியாதென எழுந்து நிற்க எத்தனிக்கையில் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. நடுக்கத்துடன் படுக்கையிலுள்ள அழைப்பு மணியை அழுத்தினேன்.