அப்பன் தொகுப்பில் நூலாசிரியர் தனது தந்தையைக் குறித்த நினைவுக்குறிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். தந்தை மகன் உறவு பற்றி இலக்கியத்தில் நிறையவே பேசப்பட்டுள்ளது. அந்த அளவுக்கே சிக்கலும் ஆழமும் கொண்ட தந்தை மகள் உறவைக் குறித்து விரிவாகவும் நேர்மையாகவும் இத்தொகுப்பு பேசியுள்ளது. வாழ்க்கை ஒட்டத்தில் ஒரு தனிப்பட்ட ஆளுமை அடையும் மாற்றங்களையும் ஒரு காலகட்டத்தின் கனவுகளையும் இத்தொகுப்பு காட்டிச்செல்வதோடு அக்காலகட்டத்தின் குடும்பச் சூழ்நிலை, சமூக யதார்த்தங்கள் மீதான பெண் பார்வையையும் பிரதிபலிக்கிறது

Appan

In Appan, the author delves into the intricate tapestry of father-daughter relationships. While literature often celebrates the bond between fathers and sons, this compilation explores the complexities and depth of the connection between father and daughter. Through personal anecdotes and shared dreams spanning various life stages, the essays illuminate the distinct perspectives of both father and daughter. Amidst life’s unpredictable twist and turns, this collection celebrates the enduring ties that bind generations together, providing glimpses into family dynamics, social expectations, and the dreams of a bygone era.

பகுதி | Excerpt

முப்பது நிமிடங்களில் அம்மாச்சி வீட்டை அடைந்தோம். வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகை உத்தரத்தில் தாத்தா தூக்கில் தொங்கி இருக்கிறார். நாங்கள் சென்றபோது அவரது உடலை வீட்டுத் திண்ணைக்கு கொண்டுவந்து கிடத்தியிருந்தார்கள். எனது குழந்தைமையின் அனைத்துச் சந்தோஷங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த அம்மாச்சி வீட்டின் மீது முதன்முதலாக மரணத்தின் சாயல் படிவதை என்னால் சீரணிக்கவே முடியவில்லை. அதுவரை உள்ளுக்குள் கொஞ்சமாய் ஒட்டியிருந்த பாசமும் ஈரமும் காய்ந்துபோய் மாமா மீது வெஞ்சினம் எழுந்தது. ஆனால் சின்ன அம்மாச்சி மார்பில் அடித்துக் கொண்டு “சாகுற மனுசனாடா அவரு? கொன்னுட்டியேடா. நீ நல்லாவே இருக்கமாட்டடா” என்று கதறியவாறு மண்ணை வாரி மாமா மீது தூற்றிய கணத்தில் வெஞ்சினம் கரைந்து காணாமல் போனது. “கடவுளே! மாமா நல்லா இருக்கணும்!” என்று மனம் சத்தம் போட்டு அரற்றி அழுதது.

நேரம் நகர நகர சாவு வீட்டுக்கே உரித்தான தொடுகைகளும், ஒலிகளும், மணங்களும், ருசிகளும் அம்மாச்சி வீட்டில் வந்து அமைந்து கொண்டிருந்தன. பறையின் ஒலியும் பெண்களின் ஒப்பாரியும் மனதை ஏதோ செய்தன. மெல்ல எழுந்து கொல்லைப்புறத்திற்குச் சென்றேன். அங்கு நின்ற ஒற்றை நார்க்காய்ச்சி மாமரத்தைப் பார்த்தவுடன் அழுகை முட்டியது. அதிலிருந்து விழும் மாம்பழங்களை விடியற்காலை வயலுக்குப் போகும்முன் எங்களுக்காக தாத்தாப் பொறுக்கி எடுத்து வைத்திருப்பார். அப்போதுதான் கவனித்தேன். தாத்தா தூக்கு மாட்டிக்கொண்ட மாட்டுக் கொட்டகையை நோக்கி அப்பா நடந்து கொண்டிருந்தார். எனக்கும் அவ்விடத்தைக் காண வேண்டுமென்ற ஆவல் உந்தியதால் நானும் கொட்டகையை நோக்கி நடக்கலானேன்.

கொட்டகைக்குள் நுழைந்தபோது நான் கண்ட காட்சி பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. அப்பா முழந்தாளிட்டுக் கைகளைக் கூப்பியவாறு மேலே பார்த்து அழுதுகொண்டிருந்தார். உத்தரத்தில் தாத்தா தூக்கிலிட்டுக் கொண்ட கயிற்றின் ஒரு பகுதி தொங்கிக் கொண்டிருந்தது. மூலையிலிருந்த குலுமைக்குப் பின்னால் நான் மறைந்துகொண்டேன். அதுவரை அப்பா அழுது நான் பார்த்ததே கிடையாது. தன்னைப் பெற்ற தகப்பனின் இறப்புக்குக் கூட ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தாதவர் மாமனாருக்காக அழுவது எனக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாகக் கொட்டகைக்குள் நுழைந்தார் குப்பாயி அப்பாயி. இவர் தாத்தாவின் அக்கா. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவனைப் பறிகொடுத்த காரணத்தால் தம்பி வீடே கதி என்று வாழ்ந்தவர். எப்போது பார்த்தாலும் கையில் விளக்குமாறோடுதான் காட்சி அளிப்பார். அதனால் இவரை ‘கூட்டுற அப்பாயி’ என்றுதான் அழைப்பேன். “யாரு பஞ்சுவா? நீ ஏன்பா இங்க வந்து உட்கார்ந்திருக்கே?” என்று அப்பாயி கேட்டவுடன் அப்பா எழுந்து நின்றார். ஆனாலும் அவர் அழுகை நிற்கவில்லை.