நாம் தற்போது கால்பதித்து நிற்கும் சிங்கப்பூரின் நிலம் ஆதியில் எப்படியிருந்தது, இன்றைய நவீனத்தன்மையை அடைய எத்தகு மாற்றங்களுக்குள்ளானது, சிங்கப்பூர் என்னும் தற்போதைய பெயருக்குக் காரணமானவராகக் கருதப்படும் சங்நீலஉத்தமன் சோழப்பரம்பரையைச் சேர்ந்தவரா, சோழர்கள் தெமாசெக் வந்து சென்றதாய் நம்பப்படும் காலம் முதல் ராபிள்ஸ் இங்கு வந்த காலம்வரை சிங்கப்பூர் எப்படியிருந்தது, இத்தகைய கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியாக செஜாரா மலாயு உள்ளிட்ட நூல்களிலிருக்கும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்.

AadhiNilathu Manidhargal

This book embarks on a journey exploring Sang Nila Utama's connection to the illustrious Chola dynasty. Tracing Singapore's evolution from the era when the Cholas are believed to have set foot on its shores to the arrival of Sir Stamford Raffles, this book explores the historical events that have shaped the city-state. The book documents the transformative journey of Singapore, shedding light on the pivotal moments and changes that have propelled it to its present status. Drawing upon a diverse array of sources, including Sejarah Melayu, the book endeavours to answer intriguing questions surrounding the customs and societal nuances that have defined the kings who ruled Singapore across the centuries.

பகுதி | Excerpt

செஜாரா மெலாயு, சங் நீல உத்தமாவின் மூதாதையர்களில் ஒருவரான ராஜா இஸ்கந்தர் சுல்கர்னெய்ன் இந்துஸ்தானின்மீது படையெடுத்து வருவதில் தொடங்குகிறது. ராஜா இஸ்கந்தர் ஹிந்துஸ்தானைச் சேர்ந்த  ராஜா கிடா இந்தி என்ற மன்னனைப் போரிட்டு வீழ்த்தி அவரது மகளை மணந்து கொள்கிறார். இவரது வழித்தோன்றலான ராஜா சுரன்தான் பிற்காலத்தில் முதன்முதலாகத் தெமாசிக் வந்தார் என்கிறது ஜான் லெய்டனின் மொழிபெயர்ப்பு. உலகம் கொண்டாடும் மாவீரர் அலக்ஸாண்டர்தான் ராஜா இஸ்கந்தர், இஸ்லாமின் மூலமான இப்ரஹிமிய மதத்தை உலகெங்கும் பரப்புவதே அவரது அந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ராஜா சுரன் ஹிந்துஸ்தானின் பெரும் பகுதியை ஆண்ட ராஜா சுலனின் மகள்வழிப் பெயரன். ராஜா ஹெய்ரனும் ராஜா பாண்டனும் இவரது சகோதரர்கள். ராஜா சுலன் இறந்த பின்னர் ராஜா சுரன் அரியணை ஏறுகிறார். கிழக்கிலும் மேற்கிலும் இருந்த மன்னர்கள் அனைவரும் ராஜா சுரனின் தலைமையை ஏற்க, சீனா மட்டும் அவரைப் பேரரசராய் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இதனால் சீனாவின் மீது படையெடுத்து அதைத் தன்வசப்படுத்த நினைக்கிறார் ராஜா சுரன். 

ராஜா சுரனின் படை, நிலவைப் போல ஒளிவீசும் பாதுகாப்புக் கவசங்களை அணிந்து, இருண்ட இரவில் சீனாவை நோக்கிப் புறப்படுகிறது. பேராக்கிற்கு அருகிலிருந்த கங்கா நகராவை நோக்கி அப்படைகள் நகர்கின்றன. படைகள் முன்னேறும் உக்கிரம் தாளாது அவர்கள் சென்ற வழித்தடத்தை ஒட்டியிருந்த நிலங்கள் அதிர்கின்றன. எதிர்ப்பட்ட காடுகள் அழிந்தன; பாறைகள் பறந்தன; மலைகள் நகர்ந்தன; ஆறுகள் வற்றின என்று அந்த மாபெரும் படையெடுப்பை செஜாரா மெலாயு கவித்துவமாய் விவரிக்கிறது.  

தங்களின் நாடு நோக்கி அசாத்திய வேகத்தில் முன்னேறி வரும் ராஜா சுரனின் படைகளைப் பற்றிக் கேள்விப்படும் சீன அரசர் அச்சம் கொள்கிறார்.  ராஜா சுரனைத் தடுத்து நிறுத்தத் திட்டமிடுகிறார். ப்ராஹூ என்ற நீண்ட படகில், வளர்வதற்குப் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கனிகள் நிறைந்த முதிர்ந்த மரங்களை, ஆட்களைக்கொண்டு நடுகிறார். மெல்லிய துருப்பிடித்த ஊசிகளையும், பல்லிழந்த கிழவர்களையும் அதே படகில் ஏற்றி ராஜா சுரன் வரும் திசையில் அனுப்புகிறார். பலநாட்கள் கடலில் பயணித்துத் தெமாசிக் வந்து சேர்கிறது அந்தப் ப்ராஹூ.  

தெமாசிக்கிற்குப் புதிதாய் வந்த படகிலிருந்த  கிழவர்களிடம், அங்கிருந்து  சீனா எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று தன் ஆட்களை அனுப்பி விசாரிக்கிறார் ராஜா சுரன். இக்கேள்விக்கென்று தயாராகி வந்திருந்த கிழவர்களில் ஒருவன்,

‘எங்களுக்கு வருடக் கணக்கெல்லாம் தெரியவில்லை, நான் ஏறக்குறைய பன்னிரண்டு வயதிருக்கும்போது இக்கப்பலில் ஏறினேன். அச்சமயம் விதைக்கப்பட்ட விதைகள் இப்போது மரங்களாகி இதோ இப்படிக் கனி கொடுக்கத் துவங்கிவிட்டன. எங்களுடைய பற்களெல்லாம் விழுந்துவிட்டன. இதோ இந்த ஊசிகள் ஒவ்வொன்றும் நாங்கள் கப்பலில் ஏறும் காலத்தில் உங்களின் கை தடிமானத்தில் இருந்தன. துருவேறி இப்படி மெலிந்து விட்டன. இதையெல்லாம் வைத்து இங்கிருந்து சீனாவிற்குச் செல்ல எத்தனை நாட்கள் ஆகும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என்கிறான். இதைக் கேட்ட ராஜா சுரன், சீனா, தான் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறது என்று எண்ணி  முன்னேறும் எண்ணத்தைக் கைவிடுகிறார். 

ராஜா சுரனின் கவனம் அடுத்துக் கடலை நோக்கித் திரும்புகிறது. நிபுணர்களைக் கொண்டு நீர்புகாத கண்ணாடிக் குடுவையொன்றை அவர் உருவாக்குகிறார். அதைத் தங்கச் சங்கிலியால் பிணைத்து, அதனுள் அமர்ந்து உப்புநீரினூடாக ஆழ்கடலுக்குள்  செல்கிறார். நெடுநாட்கள் பயணித்து ஒரு கடலடி நாட்டை அடைகிறார். அந்நாட்டு அரசர் அக்தப் அல் அர்ஸிடம்  மானுடக் குலத்தின் மன்னனாகத் தன்னைப் பணிவுடன் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ராஜா சுரனின் பேச்சினால் ஈர்க்கப்படும் அக்தப் அல் அர்ஸ் தன் மகளை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். இப்படி இந்திய மரபுக் கதைகளில் வருவதைப் போலப் பிற நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பியோ அல்லது போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் பொருட்டோ பிறநாட்டு இளவரசிகளை மணந்து கொள்ளும் அரசர்களை செஜாரா மெலாயுவில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. 

ராஜா சுரன் கடலடி நாட்டிலேயே வசிக்கத் தொடங்குகிறார். அங்கு அவருக்கு மூன்று மகன்கள் பிறக்கிறார்கள். சிறிது காலத்தில், வீணாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உறுத்தல்  அவருக்கு உண்டாகிறது. அக்தப் அல் அர்ஸிடம் மண்ணுலகில் தன்னுடைய வம்சம் தொடரவேண்டிய அவசியத்தைச் சொல்லி தன் நாட்டிற்குத் திரும்ப அனுமதி பெறுகிறார். சாம்பிராணி என்ற நீந்தவும் பறக்கவும் கூடிய குதிரையிலேறி அக்கடலடி நாட்டை விட்டு வெளியேறுகிறார். 

1998இல் எம்பிரெஸ் ப்ளேஸ் பகுதியை அகழ்வாராய்ச்சி செய்தபோது பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தலையற்ற குதிரை வீரனின் சிலையொன்று   கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து செண்டிமீட்டர் உயரம்கொண்ட அந்தச் சிலையின் வீரன் நகைகள் அணிந்தவனாகவும் முட்டிவரை நீண்ட சாரோங்கையும் அணிந்தவனாகவும் இருக்கிறான். அவன் அமர்ந்திருந்த குதிரைக்கு இறக்கைகள் இருப்பதால் இச்சிலை ராஜா சுரன் சாம்பிராணி குதிரை மீது அமர்ந்து கடலுக்குள்ளிருந்து கரைக்குப் பயணித்த செஜாரா மெலாயு கதையைச் சுட்டுவதாய் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.