இந்த நூல், சிங்கப்பூரில், 1960 - 1970 போன்ற காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின், வாழ்வியலை மையமாக வைத்து, எழுதப்பட்ட பத்து சிறுகதைகள். அக்காலத்தில் தமிழகத்திலிருந்து இங்கு வந்தோரின் மனநிலையும், அவர்களின் கடின உடலுழைப்பை பற்றியும்,இங்கு நடந்த இனக்கலவர காலத்தையும், மேலும் , அரசாங்க உரிமம் இல்லலாது தொழில் செய்தோரின் இன்னல்களும், ஆலைகளின் வேலை சிரமங்கள் மற்றும் அக்கால கம்பத்து வைத்திய முறைகள் போன்றவற்றையும் கதை விவரிக்கும்.

Ottukkadai

The 10 short stories in this book relates to the hard life of early migrants from India between 1960-70. It covers the intimidating period during the racial riots, the life of unlicensed hawkers, the difficult working conditions in the new upcoming industries, village medical treatments and many more.

பகுதி | Excerpt - "ஒட்டுக்கடை"

அந்த தெருவில் இருக்கும் ஐந்தடி பாதை ஒட்டுக்கடையை அறியாதவர் இல்லை. அதை சோமுக்கடை என்றே, அந்த கடைக்காரரின் பெயரில் பொதுவாக அழைப்பார்கள். பல காலமாக அங்கு அவர் கடை வைத்து இருந்ததால், பலருக்கும் அவரிடம் நல்ல பழக்கம் உண்டு. அவர் கடையில் இல்லாத பொருள் என்பது அரிது. வெற்றிலை பாக்கு, இன்ஜின் மார்க்கு பீடி, பாக்கெட் உடைக்கப்பட்ட உதிரி, சிகரெட்டுகள், போலோ மார்க்கு, பழ மார்க்கு சுருட்டு, பற்பசை, மிட்டாய் என்று இருக்கும் பொருட்களுக்கு, ஒரு நெடிய பட்டியல் போடலாம். இத்தனையும் சுவரோடு பல்லி போல் ஒட்டிக் கொண்டிருக்கும் மர பீரோவில் எப்படிதான் அடைத்து, கண்ணாடி கதவுகள் கொண்டு பூட்டி வைப்பாரோ! விடியற் காலையில் கடை திறப்பார் சோமு. காலையில் வேலைக்கு போகும் தொழிலாளர்கள் அவசர அவசரமாக அவரிடம் சிகரெட், பீடி மற்றும் சுருட்டு போன்றவற்றை வாங்கிக்கொண்டு ஓடுவார்கள். அங்கு தமிழ் தொழிலாளிகள் அதிகம். அதனால் அவர்களே அவரின் முக்கிய வாடிக்கையாளர்கள். மதியம் கொஞ்சம் தாண்டும் போது கூட்டமும் குறையும். அந்த நேரத்தில், காலையில் கொண்டுவந்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிடுவார். சோறு, கொஞ்சம் ரசம், அல்லது சாம்பார். கடித்துக்கொள்ள இரண்டு மோர் மிளகாய். அவ்வளவு தான். எப்பொழுதாவது அதிசயமாக ஒரு மீன் துண்டு,சோற்றில் பதுங்கி இருப்பதை காணலாம்! விரைவாக உண்ட பின்பு, அவரின் வழக்கமான ஸ்டூலில் அமர்ந்து, சுவரோடு சாய்ந்தபடி சற்று ஓய்வெடுப்பார். மதிய வியாபாரம் மெதுவாக செல்லும். அதுபோன்ற நேரத்தில் ஏர் மெயில் காகிதத்தை கையில் எடுத்து, தமிழகத்தில் வாழும் தன் மனைவிக்கு கடிதம் எழுத தொடங்குவார்.

நலம்....நலமறிய அவா.........

அக்காலத்தில் மனைவி மக்களை தமிழகத்தில் விட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க பலர் சிங்கப்பூருக்கு கப்பலேறி வந்தனர். முடிந்தவரை சம்பாதித்து மீண்டும் தமிழகம் சென்றோர் பலர். இங்குள்ள தமிழர்களின் சமூக தலைவர்கள், இங்கேயே தங்கி, சிங்கப்பூர் குடியுரிமை பெரும்படி எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், அதை ஏற்றவர் எண்ணிக்கை, சென்றவரை விட குறைவு. கப்பல் துறைமுகமாம், ஹார்பர் போர்ட்டில், பெரும் பெட்டிகளுடன் கப்பலேறுவோர் காட்சி அன்று சாதாரண நிகழ்வு. சோமுவும் பத்தாண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தவர்தான். வரும் போது, அவருக்கு முப்பது வயது. தனியாகவே கப்பலேறி வந்து, பலவித வேலைகள் செய்தபின், சிறு முதலீடு போட்டு, இந்த ஒட்டுக்கடையை ஆரம்பித்தார். அவரின் சிக்கனத்தாலும், திறனாலும், அவரின் கடை கொஞ்சம் இலாபத்தில் ஓட ஆரம்பித்து. இரண்டாண்டு கடந்தபின் தமிழகம் சென்று, உறவுமுறையில், தன்னை விட பன்னிரண்டு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்துக்கொண்டார். மூன்று மாதம் கழித்து மீண்டும் சிங்கப்பூர் வந்து, பழையபடி ஒட்டுக்கடையில் அமர்ந்து வணிகத்தில் ஈடுபடலானார். இடையில் மூன்று முறை தமிழகம் சென்றும் வந்துள்ளார். இங்கு இருந்தபடியே மனைவிக்கு வாரா வாரம் கடிதம் எழுதுவார். மனைவியின் பதில்கள் யாவும் காதலை விட பணப்பற்றாக்குறை பற்றியே அதிகம் இருக்கும்