பதின்மூன்று சிறுகதைகளைக் கொண்ட முகிழ் எனும் நூலில் ஒவ்வொரு கதையும் வேறுபட்ட சிங்கப்பூர்ச் சூழலைக் கொண்டது. பால்ய நட்பின் ஆழத்தையும் பேரப்பிள்ளைகளுடன் வாழத் துடிக்கும் தாத்தாவின் ஏக்கத்தையும் கூறுவதைப்போலக் குழந்தைகளின் உளவியல் போராட்டங்களையும் தூய அன்பையும் நட்பையும் கதைகள் கூறுகின்றன. பறவைகளிடம் கால் நடைகளிடம் மனிதர்கள் காட்டும் பிரியத்தையும் கதைகளில் காணலாம். இப்படி தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் மனித உணர்வுகளையும் மனித நேயத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

Mugizh

Mugizh is a compilation of 13 innovative short stories, covering different topics in Singapore. "Mandarin Orange" discusses the impact of a lost childhood friendship and "Thatha" (grandfather in Tamil) explores grandparents' yearning to live with their grandchildren. The work also explores varying themes such as children and their worldviews, navigating Alzheimer’s, the affection siblings share, and the love animals can show towards a human being. Mugizh strives to cover the broader concept of human connection and captures the marvel of everyday life and people. It weaves together tales of loss, love, hope, childlike wonder, and the spirit of Singapore.

பகுதி | Excerpt

எப்படியும் ஒரு சாப்பாட்டுக்கடை வைக்க வேண்டுமென்கிற கனவுடன் வந்திரங்கிய நடசேனுக்கு அடைக்கலம் கொடுத்த இடம் கிண்டா சாலை. அவரின் கனவு பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. 

தஞ்சாவூர் அரண்மனையில் மூன்று தலைமுறைகளுக்குச் சமையல்கார்களாக வேலை பார்த்த பரம்பரையைச் சேர்ந்தவர் என்கிற பெருமையுடன் வாழ்ந்தவர் நடேசன். “நம்ம ஊருலதான் பிழைக்க முடியல்ல.” மலேயாவுக்குச் (சிங்கப்பூர்) செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததும் குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டவர்.

சிங்கப்பூர் அவரை முகமன் காட்டி வரவேற்கவில்லை. 

“கையில ஒரு மர அகப்பையைத் தூக்கிக்கிட்டு வந்துட்டா? கடை வைச்சுட முடியுமா?” “போப்பா…ஊருக்குப் போய் பிழைப்பைப் பார்!” “போ…போ.” போன்ற நம்பிக்கையற்ற மொழிகளைக் கேட்டுத் துவண்டுவிடவில்லை அவர்.

தலைக்குமேல் கூரையாக விரிந்த வானத்தின் வெளிச்சத்தில் எந்தத் திசை நோக்கி அடுத்த அடி எடுத்து வைப்பதென்று புரியாமல் கால் நடைகளோடு கால் நடையாகச் சிராங்கூன் சாலையைச் சுற்றிச் சுற்றி வந்தார். “பார்க்கவே பரிதாபமாக இருக்கியே” என்ற ஒருவர் கிண்டா சாலையில் பத்தோடு பதினொன்றாக இருக்க இடம் கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற ஓர் இடத்தைப் பசி மறந்து தேடியலைந்தார். “அங்கு ஓர் இடமிருக்குப் போய்ப் பாரு!” கணக்கில்லா மாதங்களின் தேடலுக்குப் பிறகு ஓர் ஆறுதலான தகவல் கிடைத்தது. 

அந்தப் பத்துக்குப் பத்து இடத்தைப் பார்த்ததும் “இது போதுமே!!” என்கிற உற்சாகத்துடன் “உனக்கும் வேலை வந்துட்டு செல்லம்!! என்று மர அகப்பையை முத்தமிட்டார்.

“இப்போ முன் பணம். முதல் தேதி வாடகை சரியா வந்துடணும்!” என்று கறாராகச் சொன்னார் உரிமையாளர். 

ஒரே சொத்தான வெள்ளி அரைஞாண் கயிற்றை அவரிடமே விற்று மளமளவென்று வேலையில் இறங்கினார்.

ஒரு பெரிய தோசைக் கல். அதில் லாவகத்துடன் ஒரு துளி மாவு கூடக் கீழே சிந்தாமல் தோசை வார்ப்பதை ஆச்சரியத்துடன் காண்பர். 

“நம்ம வீட்டுப் பெண்களுக்குக்கூட இப்படித் தோசை சுடத் தெரியுமான்னு தெரியல” குடும்பங்களை ஊரில் விட்டுவிட்டு தனியாட்களாக வாழ்ந்தவர்களுக்கு நடேசன் சுடும் தோசை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. 

நாள்தோறும் பரபரப்பாக நடக்கும் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இடத்தின் உரிமையாளரின் கண்கள் பெரிதாகின. “அடுத்த மாதத்திலிருந்து…!” என்று வாடகையை உயர்த்தினார். “சார்……இப்பத்தான் தொழில் கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு..” “அதெல்லாம் முடியாது. ஒரு மாசத்துக்கு அப்புறம் புது வாடகைதான்.”

“இப்பவும் மனைவியையும், பையனையும் வரவழைக்க முடியாதுபோல் இருக்கே”  ஆறாண்டு பிரிவுக்குப் பிறகு குடும்பத்தை இங்கு வரவழைப்பதற்காகச் செய்திருந்த ஏற்பாடுகளைத் தள்ளி வைத்தார். 

நடேசன் தங்கியிருந்த கிண்டா சாலைக்கு அருகாமையில் சுமார் பத்திலிருந்து பதினைந்துப் பேர் வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு சின்னக் கடையைச் சென்று பார்த்தார். இருட்டில் மூழ்கிக் கிடந்த இடமாக இருந்தாலும் பார்த்ததும் பிடித்திருந்தது. “இதற்கு மேல் குறைக்க முடியாது. யோசிச்சுட்டுச் சொல்லுங்க” என்றார் கடையை வாடகைக்குக் கொடுப்பவர். 

தற்போது கொடுக்கும் வாடகையை விட சற்று அதிகமாக இருந்தது. எப்படியும் சமாளித்து விடலாமென்று பத்துக்குப் பத்து இடத்தைக் காலி செய்தார். 

சிராங்கூன் சாலையிலிருந்து சற்று தள்ளியிருக்கும் இடத்தில் கடை வைத்ததால் ஆட்கள் அவ்வளவு தூரம் தேடிக்கொண்டு வருவார்களா? என்கிற சந்தேகம் மனதைக் கிளறியது. “உங்கக் கடை காப்பியைக் குடிக்கும்போது தூரத்தை நினைக்க முடியல்ல” வாடிக்கையாளர்களின் பிரியமான வார்த்தைகளால் சிற்றுண்டியோடு மதிய நேர உணவையும் சமைக்க ஆரம்பித்தார். 

பாத்திரங்களைக் கழுவிப் போடுவதற்கு ஒருவர் இருப்பதைப்போல மற்ற வேலைகளுக்கு உதவியாக இன்னொருவரையும் சேர்த்துக்கொண்டார்.  

முப்பது பேருக்கு என்னன்ன சமைக்கலாம் என்று ஒரு அட்டவணையில் எழுதினார். ஏழு நாட்களும், ஏழு விதமான சாம்பார். 

கிடைப்பது எந்தக் காயாக இருந்தாலும், அதை போட்டு “ஸ்பெஷல்’ சாம்பார் என்று அசத்தினார். அதோடு கூட்டு, துவையல், அப்பளம், தயிரும் தயாரானது.  தண்ணீரில் தாளித்துக்கொட்டிய ரசம்கூடப் பாசிர் பாஞ்சாங், ஜீரோங் என்று நான்கு திசை மக்களின் நாசியைத் தீண்டியது.  

ஒரு நாள் பத்துக்குப் பத்து இட உரிமையாளரும் வந்து காப்பி, மெது வடை சாப்பிட்டு விட்டு “எல்லாம் அருமை’ என்று கையில் ஒரு சிவப்புக் கவரை கொடுத்துச் சென்றார். சீனர்களின் இரட்டைப் படை எண்களின் நம்பிக்கைபடி சிவப்புக் கவரில் இருந்த நான்கு வெள்ளிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார் நடேசன்.