“காற்றலையில்” சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூரின் பல முகங்களையும் கலாச்சார பின்புலங்களையும் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் காட்சிப்படுத்துவதோடு மனிதர்களின் உயிர்துடிப்புகளையும் ஆழமான ஏக்கங்களையும் பிரதி எடுத்துக்காட்டும் கலைத்தன்மையுடனும் படைக்கப்பட்டுள்ளது. கதைகள் குடும்ப சூழலுக்குள் உள் நுழைந்து நல்ல படிப்பினைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதப்பட்டுள்ளன. நவீன கூறுகளை உள்ளடக்கியதாகவும் வாசக இடைவெளியுடனும் எழுதப்பட்டுள்ளன.

Kaatralalyll

The collection of stories in Kaatralalyll showcases various aspects of Singapore, including its diverse facets, cultural backgrounds, contemporary lifestyle challenges, and the profound expressions of human emotions, interwoven with artistic subtlety. These stories delve into life experiences, drawing from within family environments, to present positive narratives.

பகுதி | Excerpt

நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கீழே ‘சீஷெல்’ பூங்கா இருக்கு. அதில் தங்களின் பிள்ளைகளின் வீட்டிற்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மெதுநடை, உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கும் போதெல்லாம், வெளியூர் பயணம் இல்லாதபோது அம்மா அப்பாவை இங்க கூட்டிட்டு வந்து வச்சிக்கணும். வெளியில கூட்டிட்டுப் போய்ச் சுற்றி காண்பிக்கணும். அப்பாவுக்கு அம்மா கைபக்குவம்தான் பிடிக்கும். அம்மா நல்லா சமைக்கவும் செய்வார். வித விதமாக சாப்பிடவும் விரும்புவார். சிங்கப்பூருல கிடைக்கிற சாப்பாடு வகைங்க வேறெங்கியும் இருக்குமான்னு தெரியாது. அதையெல்லாம் அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்து அந்த மகிழ்ச்சியை பார்க்கணும்ன்னு நினைச்சிருந்ததெல்லாம் கற்பனையாவே போயிட்டு. திடீரென்று அம்மாவுக்கு கடுமையான முடக்குவாதம் வந்து அவரைப் படுக்கையில் தள்ளியதால் எதையுமே நினைவாக்க முடியவில்லை. “நான் பார்க்கிறத ரசிக்கிறத அம்மாவும் பாக்கணும் ரசிக்கணும்னு ஆசைப்படுறேன்பா” என்று சொன்ன அவரின் உணர்வு புரிந்ததால் நீங்களாவது வாருங்கள் என்று சொல்லி அவரைக் கட்டாயப்படுத்த முடியவில்லை. கடந்த எட்டு மாதங்களாக வீட்டிலிருந்துதான் வேலை. இன்னும் கொஞ்ச மாதங்களுக்கும் இதேநிலைதான். அம்மா அப்பாவ பார்த்து நாளாச்சு. ஏக்கமாதான் இருக்கு. ஊருக்குப் போகலாம் என்றால் “எம்ப்ளாய்மென்ட் பாஸ்”ல இருக்கிறவங்க போனா திரும்பி வரதுக்கு விசா பிரச்சினை. எங்க அலுவலகத்திலேயே சிலர் ஊரில் மாட்டிக்கொண்டு சம்பளமில்லாமல் விடுமுறையில் இருக்கிறார்கள். சிலருக்கு வேலையே போய்விட்டது. எனக்கும் அலுவலக நண்பர்களைத்தவிர வேறு யாரையும் தெரியாது. பேசாமல் ஊருக்கே போய்விடலாம் என்கிற யோசனை கூட வந்துட்டு. அப்பாக்கிட்ட சொன்னதுக்கு “போனது போயிட்ட கையில நாலு காச சேர்த்துகிட்டு வா. எங்களைப்பத்தி கவலைப்படாதே. என்னதான் நம்ம நாட்டைப்பத்தி கொற சொன்னாலும் இங்கவுள்ள வசதி வாய்ப்பு எங்கையும் கிடையாது”ன்னு சொல்லிட்டார். மனம் வறண்டு போய் இருக்கும் இந்நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டே நடந்தது எனக்கு அப்பாவுடன் செல்வதுபோல இருந்தது. ஏழு மணிக்கு ஒரு மீட்டிங். அது இரவு எத்தனை மணிவரை செல்லும் என்றும் தெரியாது. அதனால் வழக்கமான நேரத்தைவிட சீக்கிரமாகக் கிளம்பியது நல்லதாய்ப் போயிற்று. அவருடைய தாத்தா ராஜூலா கப்பலில் அவர் அப்பாவுடன் சிங்கப்பூருக்கு வந்தது, அவர்கள் ஒரு கடையில் வேலை பார்த்தது, ஓரிரு முறை ஊருக்குப் போனது, இராணுவத்தில் தான் ஆயுதப்படை பிரிவில் இருந்தது என்று பழைய கதைகளை கோர்வையாக சொல்லிக்கொண்டே வந்தார். ‘இதெல்லாம் நல்லா நினைவில் இருக்கே’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மனைவி ஜானகியும் நானுமாதான் தினமும் வாக்கிங் வருவோம். என்னவோ இப்போ கொஞ்ச நாளா அவ வர்றது இல்லை. என்னைய விட்டுட்டு எங்கயும் போக மாட்டா ஆனா இப்ப வீட்டுலயும் காணும். எங்கன்னு பையன கேட்டா அவன் என்னவோ சொல்றான். அவளுக்குச் செடின்னா உசிருங்கிறதால வீட்டுல நிறைய செடி வச்சிருப்பா. அதுவும் மல்லிகைச் செடி நிறைய இருக்கும்.

மறதி நோயின் கொடுமை மனைவி இறந்த வலியைக் கூடத் தெரியாமல், பேத்தி நல்லா பாடுவா டான்ஸ் ஆடுவா என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தவரைப் பார்க்க வேதனையாக இருந்தது.

அதற்குள் நாங்கள் “பாசிர் ரிஸ் க்ரெஸ்ட்” உயர்நிலைப்பள்ளி அருகே வந்திருந்தோம். அவர் சொல்வது இந்தப் பள்ளியாக இருக்க வேண்டுமே. பக்கத்தில் என்றால் எப்படியோ யாரையாவது கேட்டு வீட்டை அடையாளம் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டே “இந்தப் பள்ளிகூடமாப்பா?” என்று கேட்டேன். சற்று நேரம் அதையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஆமாம் தம்பி’ என்று சொல்லவேண்டுமே என மனம் கெஞ்சிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் தேடிக் கொண்டுபோய் விடுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அவரைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. மாத்திரை ஏதாவது எடுக்கும் நேரம் இருக்கலாம். அதனால் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“பேருந்து நிறுத்தத்தைக் காணுமே!” என்றார். சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தைக் காண்பித்தேன். “இல்லப்பா நான் சொல்றது இன்னும் பள்ளிகூடத்துக்குப் பக்கத்திலேயே இருக்கும் அதோட இங்க வீடெல்லாம் புளூ கலர்ல்ல இருக்கு” என்று சொன்னவரின் முகத்தில் ஆர்வம் எதிர்பார்ப்பு எல்லாம் கலைந்து ஏமாற்றம் ஏறி அமர்ந்திருந்தது. ‘சே... அவர்தான் ஆரம்பத்துலேயே மெரூன் கலர் கட்டடம்னு சொல்லிட்டாரே. அத மறந்துட்டு பாவம் அவர இவ்ளோ தூரம் நடக்க வச்சிட்டேன். பேசாமல் காவல் நிலையத்திலேயே கொண்டுபோய் விட்டுவிடலாமா?’ எப்படியும் நம்மை வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுவான் என்ற நம்பிக்கையில் என்னுடன் அரைமணி நேரமாக இருக்கும் அவரை ஏமாற்றவும் மனம் ஒப்பவில்லை. கருநீல ஆடை அணிந்த காவலர்கள் கண்முன் தோன்றித் தோன்றி மறைந்தார்கள்.