இரு வேறு நிலங்களில் வாழும் அனுபவங்களோடு தன் அகவாழ்வினை மூன்றாம் நிலமாகக் கருதி எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய முப்பரிமாணத் தொகுப்பு. சிங்கப்பூர் வாழ்வின் அன்றாடங்களில் தன்னைப் பாதித்த அக, புற நிகழ்வுகளை, இயற்கையின் அருந்தருணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். சிங்கப்பூர் வாழ்வில் தான் அனுபவிக்கும் அக நெகிழ்வுகளையும், நெருக்கடிகளையும், கொரோனா காலத்தின் வாதைகளையும், காதல், காமம் மற்றும் இதர அகச் சித்திரங்களையும் புறத்தெறிப்புகளாகக் கவிதைகளாக்கியிருக்கிறார்.

Gnapakapperunkaliru

A collection of poems written with the experience of living in two different lands and considering one's inner life as the third. The poet has visualised the internal and external events that affected her everyday life in Singapore. She has written poems of love, lust, inner reflections, crises, and the torments of the pandemic.

பகுதி | Excerpt - "நகர்வின் கனம்"

தூவும் மழையில்

தன் இறகுகள் பெருக்கி

வெள்ள வாய்க்கால் 

தடுப்புக் கம்பியில் அமர்ந்திருந்தது

ஒற்றை மைனா.

 

கொஞ்சம் விழிகளுக்குக்

கருணை வேண்டி

ஒரு எட்டு நெருங்கினேன்.  

 

என் மீது

பழைய பாவங்களையெல்லாம் நிரப்பி

இப்புறக் கம்பியிலிருந்து

வாய்க்காலின் அப்புறக்கம்பிக்குப்

பறந்துவிட்டது.

 

என் மீச்சிறு அசைவின் 

பெருங்குற்றத்தை 

மன்னிக்க மறுத்த இதயத்தைக்

கைகளில் ஏந்தி 

ஒற்றை நொடி

அதன் முன் நீட்டினேன்.

 

அக்கணம்

இன்னும் உள்ளங்கைகளில்

கனத்துக்கொண்டே இருக்கிறது.